உயிர்களை காப்பாற்ற தடுப்பூசி அவசியம்; புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் மோடி பேச்சு


உயிர்களை காப்பாற்ற தடுப்பூசி அவசியம்; புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் மோடி பேச்சு
x
தினத்தந்தி 27 May 2021 12:48 AM GMT (Updated: 27 May 2021 12:48 AM GMT)

உயிர்களை காப்பாற்றுவதில், கொரோனாவை வீழ்த்துவதில் தடுப்பூசி அவசியமானது என்று புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

புத்த பூர்ணிமா
புத்த பெருமான் பிறந்த நாள், புத்த பூர்ணிமாவாக உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காணொலிக்காட்சி வழியாக நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது  அவர் கூறியதாவது:-
நமது பூமியின் முன்னேற்றத்துக்காக புத்த பெருமானின் உன்னதமான லட்சியங்களையும், தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள் இது.கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இரண்டாவது அலையை அனுபவிக்கின்றன. மனித குலம் சந்திக்கிற மிக மோசமான நெருக்கடி இதுவாகும். இது பலரது வீடுகளில் சோகத்தையும், துயரத்தையும் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பு
இந்த பெருந்தொற்று ஒவ்வொரு நாட்டையும் பாதித்துள்ளது. பொருளாதார தாக்கமும் மிகப்பெரியது. கொரோனாவுக்கு முன்பாக அல்லது பின்பாக என்று நிகழ்வுகளை நிச்சயமாக நினைவில் கொள்வோம்.தற்போது கொரோனா பற்றிய புரிதல் உள்ளது. இது அதற்கு எதிரான போராட்டத்தை வலுவாக்கி உள்ளது. தற்போது மிக முக்கியமாக நம்மிடம் தடுப்பூசி உள்ளது. இது உயிர்களைக்காக்கவும், பெருந்தொற்றை வீழ்த்தவும் முற்றிலும் அவசியமானது.

வணங்குகிறேன்
இந்த அவையின் வாயிலாக நான் கொரோனா பெருந்தொற்றில் முதலில் பதிலளித்த சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், தன்னார்வ பணியாளர்களை வணங்குகிறேன். இவர்கள் ஒவ்வொரு நாளும் தன்னலமற்று தங்கள் உயிரைப்பணயம் வைத்து மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்கள்.கொரோனாவால் தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவர்களுடனே நானும் துக்கப்படுகிறேன்.

புத்தர் வாழ்க்கை காட்சிகள்
புத்தர்பெருமான் வாழ்க்கையைப் படிக்கிறபோது, 4 காட்சிகளைப் பார்க்க முடிகிறது. இந்த 4 காட்சிகளும் புத்தர்பெருமானை மனித துன்பங்களை நேருக்கு நேர் சந்திக்க வைத்தன. அதே நேரத்தில் மனித துன்பங்களை அகற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கான விருப்பத்தையும் அது அவருக்குள் தகிக்க வைத்தது. புத்தர்பெருமான் நம் அனைவருக்குமான ஆசீர்வாதங்களை, கருணையை, நலனை கற்றுத்தந்தார்.கொரோனா நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். அதை எதிர்த்துப்போராடுவதற்கு நாம் எல்லாவற்றையும் செய்யும்போது, மனித குலம் எதிர்கொள்ளும் மற்ற சவால்களை நாம் இழந்துவிடக்கூடாது. இந்த புத்த பூர்ணிமாவில் புத்தரின் கொள்கைகள் மீதான நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே, நேபாள பிரதமர் சர்மா ஒலி, மத்திய மந்திரிகள் பிரகலாத் சிங், கிரண் ரிஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story