லட்சத்தீவில் மாட்டு இறைச்சிக்கு தடைவிதிக்க யூனியன் நிர்வாகம் முடிவு


லட்சத்தீவில் மாட்டு இறைச்சிக்கு தடைவிதிக்க யூனியன் நிர்வாகம் முடிவு
x
தினத்தந்தி 27 May 2021 2:40 PM GMT (Updated: 27 May 2021 2:40 PM GMT)

இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. இந்த யூனியன் பிரதேசத்தில் மாட்டு இறைச்சிக்கு தடைவிதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

லட்சத்தீவு,

இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கியுள்ளது. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக ப்ரபுல் ஹடா படேல் செயல்பட்டுவருகிறார். ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் சமீபத்தில் லட்சத்தீவில் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2021-ஐ அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

இந்த சட்டம் லட்சத்தீவில் மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்க வழிவகுக்கிறது. அதேபோல், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. 

இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், லட்சத்தீவு எடுக்க உள்ள இந்த முடிவுகளுக்கு பாஜக தவிர எஞ்சிய உள்ளூர் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். மாட்டு இறைச்சி தடை மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், லட்சத்தீவு நிர்வாக தலைவர் ப்ரபுல் ஹடா படேலை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.   

Next Story