கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்


கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 28 May 2021 7:55 PM GMT (Updated: 28 May 2021 7:55 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக இருக்கிறது. மாநிலத்தில் இந்த அலை கடந்த 5-ந் தேதி உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி பதிவானது. நாட்டிலேயே மராட்டியத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகம் தான் கொரோனா தினசரி பாதிப்பில் 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலம் ஆகும்.

அதன் பிறகு மாநிலத்தில் கொரோனா பரவல் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆயினும் மாநிலத்தில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. கொரோனா பாதிப்பு விகிதம் சுமார் 20 சதவீதமாக உள்ளது. இது அதிகம் என்றும், அது 5 சதவீதத்திற்கும் கீழ் வர வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் கொரோனா 3-வது அலை வரும் என்றும், அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே கொரோனா 2-வது அலையில் கர்நாடகத்தில் மட்டும் 1 முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சம் பேரை வைரஸ் தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பாதிப்பு லேசாக அல்லது மிதமாக மட்டுமே இருந்ததாகவும், உயிரிழப்பு என்பது மிக குறைவு என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா 2-வது அலையிலேயே குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகமாக இருக்கும் நிலையில், 3-வது நிலையில் நிச்சயமாக அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனால் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story