மராட்டியத்தில் வரும் ஜூன் 1 முதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு


மராட்டியத்தில்  வரும் ஜூன் 1 முதல்  தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 29 May 2021 2:46 AM GMT (Updated: 29 May 2021 2:46 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2-வது கொரோனா அலை உச்சத்தை தொட்டது. தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் ஏப்ரல் 14-ந் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு போல கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டது. மும்பையில் மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில் மே மாத தொடக்கம் முதல் மாநிலத்தில் நோய் பாதிப்பு குறையத்தொடங்கியது. தற்போது தினந்தோறும் சுமார் 25 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவே மந்திரிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இதேபோல முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் ஜூன் 1-ந்தேதிக்கு பிறகும் கட்டுபாடுகள் தொடரும் என கூறினார். மேலும் அவர் மாநிலத்தில் தற்போதும் கூட 10 முதல் 15 மாவட்டங்களில் நோய் பாதிப்பு சதவீதம் அதிகம் இருப்பதாகவும், கருப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் மாநிலத்தில் மேலும் 15 நாட்களுக்கு தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தேவை என்பதால், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்கள் ஜூன் 1-ந் தேதி வெளியிடப்படும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தளர்வுகள் எதுவும் இருக்காது. நோய் பாதிப்பு குறைந்து உள்ள இடங்களில் சில வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்.அத்தியாவசியம் இல்லாத கடைகளை திறக்க அனுமதி அளிப்பது குறித்து ஜூன் 1-ந் தேதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story