கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சி போராட்டம்


கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சி போராட்டம்
x
தினத்தந்தி 29 May 2021 11:16 PM GMT (Updated: 29 May 2021 11:16 PM GMT)

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் போராட்டம்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி நடந்து வருகிறது. எனினும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தொய்வடைந்து உள்ளது. மராட்டியத்தில் மருந்து பற்றாக்குறை காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்தநிலையில் தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மும்பை காங்கிரஸ் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் மும்பை தலைவர் பாய் ஜக்தாப் தலைமையில் கட்சியினர் மகாலெட்சுமி கோவில் அருகே ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

போராட்டத்தில் பாய் ஜக்தாப் கூறியதாவது:-

இந்தியா மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி நாடு. ஆனால் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு மருந்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டார். இதன்காரணமாக மக்கள் தடுப்பூசி பற்றாக்குறையை சந்தித்து உள்ளனர். உலகில் மற்ற நாடுகளில் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பொதுமக்கள் பணம் கொடுத்து தடுப்பூசி போடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல காங்கிரஸ் கட்சியினர் தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து பைகுல்லா, சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story