முதல்-மந்திரி எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லாத மந்திரிகளை பதவியில் இருந்து நீக்க வேண்டும்; கர்நாடக எம்.எல்.ஏ ராஜூ கவுடா பேட்டி


முதல்-மந்திரி எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லாத மந்திரிகளை பதவியில் இருந்து நீக்க வேண்டும்; கர்நாடக எம்.எல்.ஏ ராஜூ கவுடா பேட்டி
x
தினத்தந்தி 30 May 2021 12:01 AM GMT (Updated: 30 May 2021 12:01 AM GMT)

எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லாத மந்திரிகளை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ராஜூ கவுடா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

யோகேஷ்வருக்கு எதிராக கருத்து

கர்நாடக முதல்-மந்திரியாக உள்ள எடியூரப்பாவை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக, புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் எடியூரப்பாவை மாற்றும் முயற்சியில் சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் தான் டெல்லிக்கு சென்று எடியூரப்பாவை மாற்றுவது குறித்து மேலிட தலைவர்களிடம் பேச முயன்றதாக தகவல்கள் வெளியானது. இதனால் சி.பி.யோகேஷ்வருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய மந்திரி சி.பி.யோகேஷ்வர் எனது செயல்பாடுகளில் யார் தலையிட்டாலும் பொறுத்து கொள்ள மாட்டேன். கர்நாடகத்தில் 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பா.ஜனதாவில் நீடிக்க விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறி விடலாம் என்று சி.பி.யோகேஷ்வருக்கு, ஈசுவரப்பா அறிவுரை வழங்கி இருந்தார்.

மந்திரிகளை நீக்க வேண்டும்

இந்த நிலையில் சுராப்புரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ ராஜூ கவுடா, சி.பி.யோகேஷ்வரை மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார். அவர் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக சிலர் கிளம்பி உள்ளனர். அவர்களால் எடியூரப்பாவை ஒன்றும் செய்ய முடியாது. சிலர் எடியூரப்பாவின் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி உள்ளனர். மக்கள் ஆதரவுடன் தான் எடியூரப்பா முதல்-மந்திரியாக உள்ளார். இதனால் எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லை என்று கூறும் மந்திரிகளை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

எடியூரப்பா, மாநில மக்களை நம்பும் மந்திரிகள் மட்டும் மந்திரிசபையில் நீடித்தால் போதும். கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகளை எடியூரப்பா சிறப்பான முறையில் கையாண்டார். எனக்கு பின்னால் ஏதோ சக்தி உள்ளதாகவும், இதனால் நான் அதிகம் பேசுவதாகவும் சி.பி.யோகேஷ்வர் கூறி உள்ளார். எனக்கு தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதனால் நான் தைரியமாக உள்ளேன். யார் காலையும் பிடித்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சி.பி.யோகேஷ்வர் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர். அதனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. ஆனாலும் அவருக்கு எடியூரப்பா மந்திரி பதவி வழங்கினார். பா.ஜனதாவில் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் சி.பி.யோகேஷ்வர் அமைதியாக இருப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story