டோமினிக்கா நாட்டில் இருந்து மெகுல் சோக்சியை அழைத்து வர இந்தியா அதிரடி நடவடிக்கை


டோமினிக்கா நாட்டில் இருந்து மெகுல் சோக்சியை அழைத்து வர இந்தியா அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 30 May 2021 6:42 PM GMT (Updated: 30 May 2021 6:42 PM GMT)

வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியை அழைத்து வர தேவையான ஆவணங்களுடன் இந்தியா ஒரு தனி விமானத்தை டோமினிக்காவுக்கு அனுப்பியது.

நாடு கடத்த தடை
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.நிரவ் மோடி, லண்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சி, கடந்த 23-ந் தேதி அங்கிருந்து மாயமானார். 25-ந் தேதி, அண்டை நாடான டோமினிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டார்.அவரை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைத்து விடுமாறு ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனி கூறினார். ஆனால், மறுஉத்தரவு வரும்வரை மெகுல் சோக்சியை நாடு கடத்த டோமினிக்கா ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை ஜூன் 2-ந் தேதி நடக்கிறது.

விமானம் அனுப்பியது
இந்தநிலையில், மெகுல் சோக்சியை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதில் இந்தியா தீவிரமாக இருக்கிறது. அதற்காக, நாடு கடத்த தேவையான ஆவணங்களை ஒரு தனி விமானத்தில் டோமினிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இத்தகவலை ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆனால், இந்திய தரப்பு இதை உறுதிப்படுத்தவில்லை.இந்தியா அனுப்பி வைத்த கத்தார் ஏர்வேஸ் ஜெட் விமானம், கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் டோமினிக்கா போய்ச் சேர்ந்துள்ளதாக விமான நிறுவன ஆவணங்களில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மெகுல் சோக்சியை நாடு கடத்துவது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story