உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர் உடல் ஆற்றில் வீச்சு; வீடியோ வெளியானதால் பரபரப்பு


உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர் உடல் ஆற்றில் வீச்சு; வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2021 7:14 PM GMT (Updated: 30 May 2021 7:14 PM GMT)

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர் உடலை ஆற்றில் வீசிய 2 பேர் வீடியோவில் சிக்கி, அது வைரலானது.

கொரோனாவால் இறந்தவர்கள் உடல்
உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றிலும், யமுனா ஆற்றிலும், பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றிலும், கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் வீசப்பட்டு, அவை மிதந்து வந்து கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் ஆறுகளில் வீசப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உ.பி.யில் ஆற்றில் வீச்சு
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பலராம்பூர் மாவட்டத்தில் ரப்தி ஆற்றில், கொரோனாவில் இறந்த ஒருவரது உடலை 2 பேர் பாலத்தில் இருந்து வீசியதை அந்த வழியே சென்றவர்கள் செல்போனில் வீடியோவாக படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இது வைரலானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உடலை வீசியதில் ஒருவர் சுய பாதுகாப்பு கவச உடையை அணிந்திருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கினர். இதில் ஆற்றில் வீசப்பட்டது, கொரோனாவால் இறந்த சித்தார்த் நகர் மாவட்டம், சோரத்காரை சேர்ந்த பிரேம்நாத் மிஷ்ரா உடல் என தெரிய வந்துள்ளது. அவரது உடலை கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகள்படி, குடும்பத்தினரிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் 28-ந் தேதி ஒப்படைத்துள்ளது. அதைத் தான் ஆற்றில் வீசி உள்ளனர். குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story