தன்னிச்சையாக திரும்பப்பெற மத்திய அரசால் முடியாது; மேற்கு வங்காள தலைமை செயலாளரை விடுவிக்க மம்தா அரசு மறுக்கலாம்; சட்ட நிபுணர்கள் கருத்து


தன்னிச்சையாக திரும்பப்பெற மத்திய அரசால் முடியாது; மேற்கு வங்காள தலைமை செயலாளரை விடுவிக்க மம்தா அரசு மறுக்கலாம்; சட்ட நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 30 May 2021 7:26 PM GMT (Updated: 30 May 2021 7:26 PM GMT)

மேற்கு வங்காள தலைமை செயலாளரை தன்னிச்சையாக திரும்பப்பெற மத்திய அரசால் முடியாது. அவரை விடுவிக்க மறுப்பதற்கு மம்தா அரசுக்கு உரிமை உள்ளது என்று சட்ட நிபுணர்களும், முன்னாள் அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைமை செயலாளர் திரும்ப அழைப்பு
மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். தாமதமாக வந்ததுடன், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார்.அடுத்த சில மணி நேரத்தில், அம்மாநில தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்தது. இது, பழிவாங்கும் செயல் என்று மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், இதுகுறித்து சட்ட நிபுணர்களும், முன்னாள் அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஜவகர் சிர்கார் கூறியதாவது:-
தனது கட்டுப்பாட்டில் இல்லாமல், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியை மத்திய அரசு தன்னிச்சையாக மாற்ற முடியாது. ஒரு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரியை மத்திய அரசுக்கோ, இதர மாநிலத்துக்கோ அல்லது பொதுத்துறை நிறுவனத்துக்கோ சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலுடன்தான் மாற்ற முடியும் என்று இந்திய ஆட்சிப்பணி விதி கூறுகிறது.

தீர்ப்பாயத்தை அணுகலாம்
ஆனால் மத்திய அரசு மேற்கு வங்காள அரசின் ஒப்புதலையோ, தலைமை செயலாளரின் விருப்பத்தையோ கேட்காமல் மாற்றல் உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, மாநில அரசு இதை அமைதியாக மறுத்து பதில் அனுப்பலாம். மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தையோ, ஐகோர்ட்டையோ அணுகி தீர்வு தேடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த வக்கீல் அருநாபா கோஷ் கூறுகையில், ‘‘மத்திய அரசு, தலைமை செயலாளரை மாற்றலாம். ஆனால், அதற்கென நேரம் இருக்கிறது. அவரை விடுவிக்க முடியாது என முதல்-மந்திரி மறுக்கலாம்’’ என்றார்.

சட்டத்தின் முன்பு நிற்காது
மத்திய அரசின் உத்தரவு, சட்டத்தின் முன்பு நிற்காது என்று முன்னாள் அரசு செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.இதுபோல், சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தில் இருந்து 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்ப மாநில அரசு மறுத்ததையும், தமிழ்நாட்டில் இருந்து போலீ்ஸ் டி.ஜி.பி.யை மத்திய பணிக்கு அனுப்ப மாநில அரசு மறுத்ததையும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Next Story