பா.ஜனதா நிவாரண பணிகளை மேற்கொள்கிறது எதிர்க்கட்சிகள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றன: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு


பா.ஜனதா நிவாரண பணிகளை மேற்கொள்கிறது எதிர்க்கட்சிகள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றன: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 May 2021 8:23 PM GMT (Updated: 30 May 2021 8:23 PM GMT)

கொரோனாவுக்கு மத்தியிலும் பா.ஜனதா நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகையில், எதிர்க்கட்சிகள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

சேவை தினமாக அனுசரிப்பு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக கொண்டாட்டங்களை பா.ஜனதா தவிர்த்து உள்ளது. அதேநேரம் இந்த நாளை சேவை தினமாக அனுசரிக்க பா.ஜனதா தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் 1 லட்சம் கிராமங்களில் பா.ஜனதாவினர் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

குறிப்பாக தேவையில் இருக்கும் மக்கள், ஏழைகளுக்கு உணவு பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பணிகளை பா.ஜனதாவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொண்டர்களிடையே உரை

இந்தநிலையில் மோடி அரசின் 7-வது ஆண்டு நிறைவையொட்டி பா.ஜனதா தொண்டர்களிடையே கட்சியின் தேசிய தலைவர் நேற்று மெய்நிகர் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் எதிர்க்கட்சிகளை குறை கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சேவையில் ஈடுபடவேண்டும்

மத்திய அரசு 7 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும் இந்த வேளையில் கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 2 கிராமங்களிலாவது, கொரோனா மற்றும் ஊரடங்கு நெறிமுறைகளை பின்பற்றி சேவைகளில் ஈடுபட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களைப்போல அல்லாமல், பா.ஜனதாவினர் இந்த நெருக்கடி காலத்தில் மக்களோடு நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வெறும் மெய்நிகர் முறையிலான செய்தியாளர் சந்திப்புகளையே நடத்துகின்றனர்.

சந்தேகம் எழுப்பினர்

இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பா.ஜனதா தலைவர்களும், தொணடர்களும் மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரோ தனிமைப்படுத்தலுக்கு சென்று விட்டார்கள். கொரோனா தடுப்பூசிக்காக இப்போது சத்தம் போடுபவர்கள்தான் கடந்த காலத்தில அந்த தடுப்பூசிகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

 


Next Story