கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்-மந்திரி எடியூரப்பா முக்கிய முடிவு


கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்-மந்திரி எடியூரப்பா முக்கிய முடிவு
x

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நீட்டிக்கப் படுமா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா 2-வது அலை வேகமெடுக்க தொடங்கியது.

முழு ஊரடங்கு
இதனால் மாநிலத்தில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்தது. முதல் அலையை விட 2-வது அலையின் பரவல் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும், சில கடைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் அனுமதிக்கப்பட்டன. அது ஊரடங்கு போல் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 11-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க மாளிகை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. 14 நாட்கள் போடப்பட்ட இந்த ஊரடங்கு கடந்த 24-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு அதாவது வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா பரவல்
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி சுமார் 20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும், இன்னும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீட்டிப்பா?
கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர் குழு அறிக்கை வழங்கவில்லை. நிலைமையை ஆராய்ந்து பார்த்து வருகிற 5 அல்லது 6-ந் தேதி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் மதித்து நடந்து கொண்டால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதுகுறித்து மந்திரிகள், மருத்துவ நிபுணர் குழுவினருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, உணவு பொருட்கள் தொகுப்பை வழங்கினார். அனைவரும் பாதுகாப்பாக இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

Next Story