லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்


லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில்  தீர்மானம்
x
தினத்தந்தி 31 May 2021 5:05 AM GMT (Updated: 31 May 2021 5:05 AM GMT)

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

திருவனந்தபுரம்

லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை அமல்படுத்தியுள்ளார். 

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பதாகவும், அதேபோல மதுபான கடைகளுக்கு அனுமதியளிப்பதாகவும் அறிவித்தார். இது அத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தவும், குண்டர் சட்டத்தையும் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அத்தீவு மக்கள் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். 

கேரள அரசு, லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபுல் கோடா படேலை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில்  தலையிட வேண்டும் என்று காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.

இந்த நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரபுல் கோடா படேலை மத்திய அரசு நீக்கக் கோரி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். 

"லட்சத்தீவில் பா.ஜ.க தனது  நிகழ்ச்சி நிரலை நிலை நாட்டுவது மற்றும் பெருநிறுவன நலன்களை திணித்து செயல்படுத்துவதே இந்த முயற்சி. லட்சத்தீவு மக்கள், அவர்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்த பின்னர் இது சபையில் நகர்த்தப்பட்ட முதல் தீர்மானமாகும்.

Next Story