புதிய சீர்திருத்த விவகாரம்: உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் லட்சத்தீவு எம்.பி. சந்திப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 May 2021 11:54 PM GMT (Updated: 31 May 2021 11:54 PM GMT)

புதிய சீர்திருத்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவை லட்சத்தீவு எம்.பி. சந்தித்தார்.

புதுடெல்லி, 

லட்சத்தீவில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தீவின் நிர்வாகியான பிரபுல் படேல் அறிவித்து உள்ளார். இது லட்சத்தீவில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மேலும் இதற்கு எதிராக கோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் லட்சத்தீவு எம்.பி.யான முகமது பைசல் நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது புதிய சீர்திருத்தங்களை திரும்பப்பெறுமாறு வலியுறுத்திய அவர், இந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக லட்சத்தீவு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.

அப்போது இந்த சீர்திருத்த வரைவு சட்டமானது லட்சத்தீவு மக்களிடம் கருத்து கேட்ட பிறகே அமல்படுத்தப்படும் என அமித்ஷா உறுதியளித்ததாக முகமது பைசல் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லட்சத்தீவில் எந்த சட்டத்தை அமல்படுத்த பரிசீலித்தாலும் அது அங்கே அனுப்பி மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்கப்படும். இதில் மக்களின் ஒருமித்த கருத்தை அறிந்தபிறகே அதை நிறைவேற்றவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார்’ என்று கூறினார்

Next Story