புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்


புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2021 1:30 AM GMT (Updated: 1 Jun 2021 1:30 AM GMT)

புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.

புதுடெல்லி, 

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை வகித்தார். அவரது தலைமையில், புகையிலைப் பொருட்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது பேசிய ஹர்ஷவர்தன், ‘புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் தினமும் 3 ஆயிரத்து 50 பேர் வீதம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனால் பெரும் சமூக, பொருளாதார சுமையும் ஏற்படுகிறது. புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகள், வியாதிகளுடன், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் வியாதிகள், மரணங்களால் உண்டாகும் பொருளாதார சுமை, ரூ.1.77 லட்சம் கோடி அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் ஆகும்.

அதேநேரம், மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால், நாட்டில் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 34.6 சதவீதமாக இருந்த புகையிலை பயன்பாடு 2016-17 ஆண்டுகளில் 28.6 சதவீதமாக குறைந்துள்ளது.

ஈ-சிகரெட்டை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவும் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

புகையிலை, புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவோர் அந்தப் பழக்கத்தைத் துறக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறியதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story