கேரளாவில் திருமண அழைப்பிதழ் இருந்தால் ஜவுளி, நகை கடைகளில் நுழைய அனுமதி - பினராயி விஜயன் அறிவிப்பு


கேரளாவில் திருமண அழைப்பிதழ் இருந்தால் ஜவுளி, நகை கடைகளில் நுழைய அனுமதி - பினராயி விஜயன் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 1:57 AM GMT (Updated: 1 Jun 2021 1:57 AM GMT)

கேரளாவில் திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே ஜவுளி, நகை கடைகளில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களை விட சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரம் ஆகும். அதே போல் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் விகிதம் படிப்படியாக குறைந்து நேற்றைய தினம் 13 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கொரோனா குறித்தான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்-மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் இன்று முதல் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் பொது இடங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து நடை பயிற்சி செல்லலாம்.

ஸ்டேசனரி கடைகள் திறக்க அனுமதி இல்லை. கேரளாவில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஜவுளி, நகை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த கடைகளில் திருமண அழைப்பிதழ்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும்.

தளர்வுகளை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஜூன் 7 முதல் பொது துறை நிறுவனங்கள், கம்பெனிகள் உள்பட அனைத்து மத்திய, மாநில அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆதிவாசி பிரிவினருக்கு முன்னுரிமை அளவு கோல் இன்றி 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தட்டுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story