பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மம்தா புறக்கணித்த விவகாரம்; ‘மக்கள் சேவையை விட ஆணவம் முக்கியமாகி விட்டது’ :மேற்கு வங்காள கவர்னர் கருத்து


பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மம்தா புறக்கணித்த விவகாரம்; ‘மக்கள் சேவையை விட ஆணவம் முக்கியமாகி விட்டது’ :மேற்கு வங்காள கவர்னர் கருத்து
x
தினத்தந்தி 1 Jun 2021 4:46 PM GMT (Updated: 1 Jun 2021 4:46 PM GMT)

பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தது பற்றி கருத்து தெரிவித்த மேற்கு வங்காள கவர்னர், மக்கள் சேவையை விட ஆணவம்(ஈகோ) முக்கியமாகி விட்டது என்று கூறியுள்ளார்.

புறக்கணிப்பு

‘யாஸ்’ புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்காளத்துக்கு சென்றார். ஆனால், அவரும், கவர்னர் ஜெகதீப் தாங்கரும் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாக வந்தார்.ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு 15 நிமிடங்களில் புறப்பட்டார்.

இந்தநிலையில், பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மம்தா புறக்கணித்தது பற்றி மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆணவம்

பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், உண்மையை தெளிவுபடுத்த இதை சொல்கிறேன். ஆய்வுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் இரவு 11.16 மணிக்கு மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து என்னிடம் அவசரமாக பேச விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமருடனான ஆய்வுக்கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் (சுவேந்து அதிகாரி) பங்கேற்றால், தானும், தனது அதிகாரிகளும் புறக்கணித்து விடுவோம் என்று சூசகமாக தெரிவித்தார். என்ன செய்வது? மக்கள் சேவையை விட ஆணவம்(ஈகோ) முக்கியமாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங். எதிர்ப்பு

கவர்னரின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி மூத்த தலைவர் சவுகதா ராய் எம்.பி. கூறியதாவது:-

கவர்னரின் கருத்து துரதிருஷ்டவசமானது. இப்படி பேச அவருக்கு அதிகாரம் இல்லை. மம்தா பானர்ஜி, 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளாா். மாநில மக்களின் நலன் மீதான அக்கறை அடிப்படையிலேயே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. என்ன செய்வது என்று அவருக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பங்கேற்றதால்தான், அதை புறக்கணித்ததாக பிரதமர் மோடிக்கு நேற்று  எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Next Story