கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு ரத்து மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு


கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு ரத்து மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 Jun 2021 12:24 AM GMT (Updated: 2 Jun 2021 12:24 AM GMT)

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

நமது நாடு, கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள்

இதன் காரணமாக மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி, நாடெங்கும் எதிரொலித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மே மாதம் 4-ந் தேதி நடைபெற இருந்த 12-ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது.

ஆனால் மாணவ, மாணவியர் நலன் கருதி 12-ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து ஜூன் 1-ந் தேதியோ, அதற்கு பின்னரோ முடிவு எடுக்கப்படும் என்று மத்திய கல்வி வாரியம் கூறியது.

உயர்மட்ட கூட்டம்

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்), நிர்மலா சீதாராமன் (நிதி), பியூஷ்கோயல் (வர்த்தகம்), பிரகாஷ் ஜவடேகர் (தகவல், ஒலிபரப்பு), தர்மேந்திர பிரதான் (பெட்ரோலியம்), ஸ்மிரிதி இரானி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு), பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில், இதுவரையில் நடந்த பரந்த மற்றும் விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

தேர்வுகள் ரத்து

அதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்தது. மாணவர்கள் நலனையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை (ரிசல்ட்) பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமைகளையும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படமாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டைப்போலவே, சில மாணவர்கள் தேர்வுகளை எழுத விரும்பினால், எப்போது நிலைமை உகந்ததாக இருக்குமோ அப்போது அவர்களுக்கு சி.பி.எஸ்.இ. வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

‘மாணவர்கள் ஆரோக்கியம், பாதுகாப்பு முக்கியம்’

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கல்வி நாட்காட்டியை பாதித்துள்ளது. இந்த தருணத்தில் தேர்வுகள் பிரச்சினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மாணவர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம் ஆகும். இந்த அம்சத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கிடையாது.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள கவலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இது போன்ற மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் மாணவர்களை தேர்வுகள் எழுதுமாறு நிர்ப்பந்திக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிம்மதி

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவ, மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களை நிம்மதிப்பெருமூச்சு விடவும் வைத்துள்ளது.

Next Story