பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் எதிரொலி ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு


பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார்  எதிரொலி ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு
x
தினத்தந்தி 2 Jun 2021 5:31 AM GMT (Updated: 2 Jun 2021 5:31 AM GMT)

பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

கொலைகார கொரோனா வைரஸ் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்க செய்துள்ளது.‌ இந்த சூழல் அனைத்து தரப்பு வயதினரின் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இது கல்வி முறையில் பெரிய அளவில் மாறுதலை உண்டாக்கியுள்ளது. கொரோனாவால் நேரடி கல்வி முறைக்கு முட்டுக்கட்டை விழுந்த சூழலில், உலகெங்கிலும் இணையவழி கல்விமுறை பிரபலமாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் வீடியோ மூலம் புகார் அளித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளால் ஒவ்வொரு நாளும் தான் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்து தனக்கே உரித்தான மழலை பாணியில் கொஞ்சும் குரலில் கைகளை அசைத்தபடி சிறுமி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

45 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை அவுரங்கசீப் என்கிற பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து அது வைரல் ஆனது.

அந்த வீடியோவில் சிறுமி ‘‘எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன் பின்னர் கம்ப்யூட்டர் வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும் மோடி ஐயா ?’’ என பொரிந்து தள்ளுகிறாள்.

அதன் பின்னர் சில நொடிகள் மவுனத்துக்கு பின் ‘‘என்ன செய்ய முடியும்? வணக்கம் மோடி ஐயா. விடைபெறுகிறேன்’’ என கூறி சிறுமி தனது பேச்சை முடிக்கிறாள்.

இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'லைக்'குகளை வாங்கிக் குவித்துள்ளது. 1,300க்கும் அதிகமானோர் இந்த பதிவை 'ரீடுவிட்' செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story