தமிழகத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

தமிழகத்திற்கு 1 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த மே 1ந்தேதியில் இருந்து 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என சில ஊடகங்களில் வெளியான தகவலை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அதற்கு பதிலளித்து உள்ளது.
இதன்படி, ஜூன் 2ந்தேதி வரை, தமிழகத்திற்கு 1 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் 93.3 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் கையிருப்பில் 7.24 லட்சம் டோஸ்கள் உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, ஜூன் 1ந்தேதி முதல் ஜூன் 15ந்தேதி வரையில் தமிழகத்திற்கு மொத்தம் 7.48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் வழியே கிடைக்கும்.
வருகிற ஜூன் 15ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்க பெறும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story