டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை: மரங்கள் வேருடன் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு


டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை:  மரங்கள் வேருடன் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 2:10 PM GMT (Updated: 4 Jun 2021 2:10 PM GMT)

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புதுடெல்லி,

நாட்டில் டெல்லி உள்பட 3 மாநிலங்களில் இன்று மழை பெய்து வருகிறது.  இதனால், வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.  டெல்லியின் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இன்று பெய்தது.

இதில், வீட்டின் ஓரம் மற்றும் சாலையோரம் நன்கு வளர்ந்து இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்தன.  அவை சாலையின் நடுவே விழுந்தன.  இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து கீழே விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

டெல்லி முழுவதும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், சப்தர்ஜங் பகுதி, லோதி சாலை உள்ளிட்ட பல இடங்களில் மணிக்கு 30 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் ஏற்பட்ட மோசமான வானிலையால், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்களை சேர்ந்த விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.

இதேபோன்று கேரளாவின் கோழிக்கோட்டில் பருவகால மழை பொழிந்து நகரெங்கும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மழை பெய்து வருகிறது.  அடுத்த 2 நாட்களுக்கு நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல நகரங்களிலும் மழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Next Story