கன்னட கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடை விற்பனை செய்து வரும் அமேசான் நிறுவனம்


கன்னட கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடை விற்பனை செய்து வரும் அமேசான் நிறுவனம்
x
தினத்தந்தி 5 Jun 2021 8:38 PM GMT (Updated: 5 Jun 2021 8:38 PM GMT)

கன்னட மக்களின் கொடி மற்றும் கர்நாடக அரசு முத்திரை பதித்த நீச்சல் உடையை கனடாவில் உள்ள அமேசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மக்களின் கொடியாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்ட கொடி உள்ளது. மேலும், அம்மாநிலத்தின் அரசு முத்திரையாக 2 சிங்கங்கங்களின் உடல்கள் யானைகளின் முகங்களுடன் உள்ளது போல் இருக்கும்.

இந்நிலையில், கன்னட மக்களின் கொடியிலான நிறத்திலும், அதில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டிருப்பது போன்ற நீச்சல் உடையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கனடா நாட்டில் விற்பனை செய்து வருகிறது. 

கன்னட மக்களின் கொடி மற்றும் கர்நாடக அரசின் முத்திரை நீச்சல் உடையில் இடம்பெற்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு சட்டரீதியிலான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தங்கள் மாநில அரசு முத்திரை மற்றும் கன்னட கொடி நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நீச்சல் உடை விற்பனையை அமேசான் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.  

முன்னதாக, கூகுளில் இந்தியாவின் மிகவும் மோசமான மொழி என தேடினால்
கன்னடம் என வந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Next Story