மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் தழுவிய போராட்டம்: பா.ஜனதா எம்.பி சம்பாஜிராஜி அறிவிப்பு


மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் தழுவிய போராட்டம்: பா.ஜனதா எம்.பி சம்பாஜிராஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 3:25 PM GMT (Updated: 6 Jun 2021 3:25 PM GMT)

மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக பா.ஜனதா எம்.பி. அறிவித்து உள்ளார்.

போராட்ட அறிவிப்பு

மராட்டியத்தில் கடந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உள்ளது. இந்தநிலையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.யும், மராத்திய மன்னர் வம்சாவளியை சேர்ந்தவருமான எம்.பி. சம்பாஜிராஜி மாநிலத்தின் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார்.

சிவாஜி மன்னராக முடி சூட்டிய நாளையொட்டி ராய்காட்டில் உள்ள கோட்டையில் அவருக்கு சம்பாஜிராஜி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் மராத்தா இடஒதுக்கீடை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

கோலாப்பூரில் தொடக்கம்

இது குறித்து அவர் கூறியதாவது:-

மராத்தா இடஒதுக்கீடை வலியுறுத்தி கோலாப்பூரில் வருகிற 16-ந் தேதி போராட்டத்தை தொடங்குகிறேன். இந்த போராட்டம் கோலாப்பூரில் உள்ள சத்ரபதி சாகுமகாராஜ் சமாதிக்கு வெளியில் நடைபெறும். மராத்தா இடஒதுக்கீடில் மகாவிகாஸ் கூட்டணி, பா.ஜனதா அரசியல் செய்கின்றன. மராத்தா சமூக மக்களுக்கு அரசியல் பற்றி கவலையில்லை. இடஒதுக்கீடை எப்படி பெற வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சமூக மக்களுக்கு நீதி கிடைக்க மாநில அரசு அவர்களுக்கு முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story