பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது ரேஷன் பொருட்களை வீட்டிலேயே கொடுக்கக்கூடாதா? மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி


பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது ரேஷன் பொருட்களை வீட்டிலேயே கொடுக்கக்கூடாதா? மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
x
தினத்தந்தி 6 Jun 2021 7:33 PM GMT (Updated: 6 Jun 2021 7:33 PM GMT)

பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கும்போது, ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று கொடுக்கக்கூடாதா என்று மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனால், அத்திட்டத்தை கவர்னர் நேற்று முன்தினம் நிராகரித்தார். மத்திய அரசின் ஒப்புதலை பெறவில்லை என்றும், திட்டத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற தேவையில்லை. ஏதேனும் சர்ச்சை எழக்கூடாது என்பதால்தான், மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம்.

அப்படி இருந்தும் டெல்லியில் இத்திட்டத்தை நிறுத்தியது ஏன்? ரேஷன் கடைகள், கொரோனாவை பரப்பும் இடங்களாக மாறிவிடக்கூடாது. ஆகவே, டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பீட்சா, பர்கர், ஸ்மார்ட்போன், ஆடைகள் போன்றவற்றை வீடு தேடிச்சென்று கொடுக்கும்போது, ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று கொடுக்கக்கூடாதா? இதனால், டெல்லியில் 72 லட்சம் பேர் பலன் அடைவார்கள். ரேஷன் மாபியாவையும் ஒழிக்க முடியும்.

மேற்கு வங்காளம், மராட்டியம், ஜார்கண்ட், டெல்லி என மாநில அரசுகளுடனும், விவசாயிகளுடனும், லட்சத்தீவு மக்களுடனும் மத்திய அரசு மோதி வருகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இப்படி இருந்தால், கொரோனாவை எப்படி வீழ்த்த முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை நிறுத்தவோ, மாற்றி அமைக்கவோ எந்த மாநிலத்துக்கும் உரிமை கிடையாது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு, தனது சொந்த திட்டத்தை தொடங்க விரும்புகிறார். அப்படியானால், அவர் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு தானியங்களை வாங்கி, வீடு தேடிச்சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்.

டெல்லியில், ரேஷன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடக்கவில்லை. ரேஷன் கடைகளில், விரல் ரேகையை சரிபார்க்கும் பாயிண்ட் ஆப் சேல் கருவி பயன்பாட்டையும் நிறுத்திவிட்டது. இதனால், ரேஷன் பொருட்கள் உரிய நபர்களுக்குத்தான் வழங்கப்படுகிறதா அல்லது வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க வழியே இல்லை.

எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் யாருக்கு ரேஷன் கொடுக்கப்போகிறார் என்று தெரியாது. அந்த பொருட்கள் திருப்பிவிடப்பட்டு, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படலாம். இப்படிப்பட்ட மிகப்பெரிய ஊழலை செய்ய அவர் விரும்பினார். அது நடைபெறாமல் மத்திய அரசு தடுத்துள்ளது.

ரேஷன் கடைகள், கொரோனா பரப்பும் இடங்களாகி விடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவாதா?

இவ்வாறு அவர் கூறினாா்.

Next Story