கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மராட்டியத்தில் புதிய தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது


கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மராட்டியத்தில் புதிய தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது
x
தினத்தந்தி 6 Jun 2021 11:57 PM GMT (Updated: 6 Jun 2021 11:57 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.

கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய சதவீதத்தை வைத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு சதவீதம் 5-க்கு கீழும், ஆக்சிஜன் படுக்கைகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகள் 1-வது பிரிவில் வருகின்றன. இந்த பகுதிகளில் ஏறக்குறைய முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2, 3, 4-வது பிரிவு பகுதிகளிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மும்பை 3-வது பிரிவில் வருகிறது. இங்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தொற்று நோய் பாதிப்பு சதவீதம் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகள் கடைசி பிரிவில் (5-வது பிரிவு) வருகின்றன. இங்கு அத்தியாவசிய கடைகளை திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையே முதல் நான்கு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில அரசு அறிவித்து உள்ள தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வருவதால் பொதுமக்கள் மடை திறந்த வெள்ளம் போல வெளியே வரவும், அவர்கள் திரளாக கூடவும் வாய்ப்பு உள்ளது. 

மராட்டியத்தில் இன்று புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் இதை பயன்படுத்தி மக்கள் திரளாக கூடுவதை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

Next Story