ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 3:31 AM GMT (Updated: 7 Jun 2021 3:31 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்க சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க அங்கு கூடுதலாக ஆயிரக்கணக்கான பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் நிலைமை சீரடைந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து துணைராணுவ படையினரின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான துணைராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து துணைராணுவப்படையினர் மீண்டும் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை போல மீண்டும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு வருவதால் காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story