இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்தது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jun 2021 4:11 AM GMT (Updated: 7 Jun 2021 4:11 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,00,636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு, இப்போது நாள்தோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன.

நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 1 லட்சத்து 20 ஆயிரத்து 529 ஆக இருந்தது. நேற்று 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. 

இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. இதன்படி இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சமாக குறைந்துள்ளது.  

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 09 ஆயிரத்து 975 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 2,427 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 14,01,609 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்து 482 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  

கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 36 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 111 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,87,589 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.


Next Story