மே மாதத்தில் 1.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்த தனியார் மருத்துவமனைகள்


மே மாதத்தில் 1.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்த தனியார் மருத்துவமனைகள்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:33 PM GMT (Updated: 7 Jun 2021 12:33 PM GMT)

கடந்த மே மாதத்தில் 1.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்துள்ளன

புதுடெல்லி

இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி பாதுகாப்பு 19 கோடியைத் தாண்டிய நிலையில், 10 மாநிலங்கள் 66 சதவீதத்துக்கும்   அதிகமான அளவைக் கொண்டுள்ளன.

தற்போது, இந்திய மக்கள்தொகையில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தடுப்பூசிகளில் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் குறைந்தது ஒரு டோசைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் கொரோனா  தடுப்பூசி இயக்கம் முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் மந்தமாக உள்ளது . ஏப்ரல் மாதத்தில் 7.75 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி, மே மாதத்தில் 28.7 சதவீதம்  குறைந்து 5.53 கோடி தடுப்பூசி டோஸ்களாக உள்ளன. 

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கம் மே 1ஆம் தேதி முதல் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை அறிவித்தது. ஆனால் மத்திய அரசின் இரட்டை கொள்முதல் தடுப்பூசி கொள்கை காரணமாக, மாநிலங்களிடம் போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததும் தடுப்பூசி இயக்கம் மந்தமாக முக்கிய காரணமமாக உள்ளன. நாடுமுழுவதும் தற்போது  தடுப்பூசி போட மக்கள் ஆர்வமுடன் இருந்தாலும் தடுப்பூசி  தட்டுப்பாடு நிலவி வருகிறது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 23,11,69,251 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 1.49 கோடி (1,49,11,649) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் கொள்கைகளின்படி தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கு நேரடியாக வழங்கும், மற்ற 50 சதவீதம்  தடுப்பூசிகளை மாநில அரசுகளும், தனியாரும் நேரடியாக நிறுவனங்களிடம் வாங்கிக்கொள்ளவேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் கடந்த மே 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஏராளமான தனியார் மருத்துவமனைகள் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் கோவாக்சின் தயாரிக்கும் பாரத்பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, கடந்த மே மாதத்தில் 1.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்துள்ளன. இதில் 22 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

Next Story