கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை


கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை
x
தினத்தந்தி 8 Jun 2021 9:11 AM GMT (Updated: 8 Jun 2021 9:11 AM GMT)

கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி

முதல் அலையில் இருந்து மெல்ல மீண்டதன் மூலம் பெற்ற சிறிய நம்பிக்கையையும் இந்த 2-வது அலை சீரழித்துவிட்டது. அன்றாடம் நிகழும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன.

ஆட்கொல்லியாக உயிர்களை காவு வாங்கி வரும் இந்த தொற்றுக்கு எதிரான மருந்துகள் இல்லாததால் மீண்டும் பொதுமுடக்கமே தீர்வாக மாறியிருக்கிறது. அப்படி தீவிரமாக அமல்படுத்திய ஊரடங்கால் மெல்ல நிலைமை மாறி வருகிறது.

அதேநேரம் கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இப்படி சொல்ல முடியாத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கும் மக்களை, அதில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன.

இதில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி திட்டத்தை அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளும் கொள்முதல் செய்யும் வகையில் திட்டத்தை பரவலாக்கியது.

இதன்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் இறங்கின.

ஆனால் இந்த பணிகள் மாநிலங்களுக்கு பெரும் சவாலாக மாறி வருகின்றன. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

எனவே மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்த் நிலையில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி  

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை இனி மத்திய அரசு முழுமையாக நடத்தும். தடுப்பூசி விநியோகத்தில் இனி மத்திய அரசு முடிவெடுக்கும்

 மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் இனி செலவழிக்க தேவை இல்லை. வரும் ஜூன் மாதம் 21 -ம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் என கூறினார்.

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story