உ.பி.: விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு


உ.பி.:  விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 7:55 PM GMT (Updated: 8 Jun 2021 7:55 PM GMT)

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  இந்த நிலையில், கான்பூர் நகரில் சச்சேண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ ஒன்றுடன் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.  4 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று காயங்களுடன் போராடியவர்களை மீட்டு ஹாலெட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.  இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளார்.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கான்பூரில் நடந்த சாலை விபத்து சோகத்திற்குரியது.  இந்த விபத்தில் பலர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமடைய வேண்டி கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கான்பூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் (பி.எம்.என்.ஆர்.எப்.) இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story