பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 2:22 AM GMT (Updated: 9 Jun 2021 2:22 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில்  இன்று பெட்ரோல் லிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

இதற்கிடையில், சர்வதேச அளவில் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது, மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர்வீர்கள். வரி வசூல் தொற்று அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் வரும் 11-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்குகள்) முன்பு அடையாள போராட்டம் நடைபெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story