ராஜஸ்தான்: தார் பாலைவனத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி தண்ணீர் தாகத்தால் உயிரிழப்பு


ராஜஸ்தான்: தார் பாலைவனத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி தண்ணீர் தாகத்தால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 6:04 AM GMT (Updated: 9 Jun 2021 6:04 AM GMT)

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் தனது பாட்டியுடன் நடந்து சென்ற 5 வயது சிறுமி தண்ணீர் தாகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டம் ராணிவாடா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தனது பாட்டியுடன் தார் பாலைவனத்தில் நடந்து சென்றபோது தண்ணீர் தாகம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த 5 வயது சிறுமியின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் குழந்தையை அவரது பாட்டி சோக்ஹி என்பவர் வளர்த்துவந்துள்ளார். 

வறுமை காரணமாக பாட்டி சோக்ஹி தான் வசித்து வந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் சில நேரங்களில் பிச்சை எடுத்து சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. சோக்ஹி பாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில், சோக்ஹி பாட்டி தனது பேத்தியான 5 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு ராணிவாடா கிராமத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். 

தார் பாலைவனம் வழியாக தனது பேத்தியை சோக்ஹி பாட்டி நேற்று அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவர் இந்த பயணத்தின் போது குடிப்பதற்கு தண்ணீர் எதுவும் கொண்டுசெல்லவில்லை.

நீண்ட தூரம் தார் பாலைவனத்தில் நடந்து சென்றதால் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தாக்கம் ஏற்பட்டு அந்த 5 வயது சிறுமி பாலைவனத்தின் மணலில் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். சோக்ஹி பாட்டியும் தண்ணீர் தாக்கத்தால் தனது பேத்தி அருகே சுருண்டு விழுந்துள்ளார். 

நீண்ட நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் 5 வயது சிறுமி தண்ணீர் தாக்கத்தில் இருந்ததால் தான் விழுந்த இடத்திலேயே பரிதாபமாக அந்த சிறுமி உயிரிழந்துவிட்டார். சோக்ஹி பாட்டியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார். 

அப்போது, அவ்வழியாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு வந்த நபர் சிறுமியும், பாட்டியும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அருகில் உள்ள கிராம மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். 

அந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் உயிருக்கும் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த பாட்டி சோக்ஹியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 5 வயது சிறுமி பாலைவனத்திலேயே உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி சோக்ஹி தனது பேத்தியை பாலவனபகுதிக்கு தண்ணீர் கூட கொண்டுவராமல் அழைத்து வந்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தார் பாலைவனத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி தண்ணீர் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.          

Next Story