ஊழியர்கள் சுமார் 400 பேர் கொரோனாவுக்கு பலி - தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசுக்கு கோல் இந்தியா கோரிக்கை


ஊழியர்கள் சுமார் 400 பேர் கொரோனாவுக்கு பலி -  தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசுக்கு கோல் இந்தியா கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 6:41 AM GMT (Updated: 9 Jun 2021 6:41 AM GMT)

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களில் சுமார் 400 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ‘கோல் இந்தியா’வும் ஒன்று. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி சப்ளை செய்து வருகிறது. 

நாட்டின் மின்சார உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. இந்த பொதுத்துறை நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதும் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோதும் கோல் இந்தியா தொடர்ந்து இயங்கி வருகிறது. 

இதற்கிடையில், கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தங்கள் ஊழியர்களில் இதுவரை 6 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், அதில் 1,000-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கோல் இந்தியா தெரிவித்துள்ளது. 

மேலும், வைரஸ் பாதிப்பால் தங்கள் ஊழியர்களில் இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவில் முடிக்கும்படி கோல் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் ஊழியர்களில் 64 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கோல் இந்தியா நிறுவனம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கென்று மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இது தொடர்பாக 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒதுக்கும்படி
மத்திய அரசுக்கு கோல் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story