ஆட்டம் ஆரம்பம்... உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பா.ஜ.கவில் ஐக்கியம்


ஆட்டம் ஆரம்பம்... உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பா.ஜ.கவில் ஐக்கியம்
x
தினத்தந்தி 9 Jun 2021 10:37 AM GMT (Updated: 10 Jun 2021 9:51 AM GMT)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த, ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாதா. இவர் ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார்.

புதுடெல்லி

உத்தரபிரதேச  சட்டசபை தேர்தல்  விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரான ஜிதின் பிரசாதா பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார்.  டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா பா.ஜ.க வில் இணைந்தார்.  அவருக்கு பியுஷ் கோயல் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். பின்னர் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவையும் ஜிதின் பிரசாதா சந்தித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர்.குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபேந்தர் ஹூடா, பிரிதிவிராஜ் சவான், கபில் சிபல், மணிஷ்திவாரி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 23 பேர் எழுதிய கடிதம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடிதம் எழுதிய தலைவர்களில் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதாவும் (வயது 47) ஒருவர்.

காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவருமான மறைந்த, ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாதா ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார்.

பா.ஜ.கவில் இணைந்த பிறகு ஜிதின் பிரசாதா நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸுடன் எனக்கு மூன்று தலைமுறை தொடர்பு உள்ளது. பல்வேறு ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அமைப்பு ரீதியாக செயல்படும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது. தேசிய கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது.

காங்கிரசில் பணியாற்றும் போது மக்களுக்காக உழைக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தினரால் இயக்கப்படும் கட்சியாக பாஜக இல்லை. எந்த கட்சியில் இருந்தேன், எந்த கட்சியில் இணைந்துள்ளேன் என்பது முக்கியமல்ல.
ஆனால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம்.

எனது அரசியல் வாழ்க்கையில் இன்று முதல் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. புதிய இந்தியாவை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். நாட்டிற்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார் என கூறினார்.

Next Story