பஞ்சாபை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மே.வங்கத்தில் போலீசாரால் சுட்டுக்கொலை


பஞ்சாபை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மே.வங்கத்தில் போலீசாரால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2021 7:14 PM GMT (Updated: 9 Jun 2021 7:14 PM GMT)

போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்சாப் போதை பொருள் கடத்தல்காரர்கள் இருவர் மேற்குவங்காளத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்கத்தா,

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்பால் புல்லர் மற்றும் ஜஸ்பிரித் சிங் ஆகிய இருவரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் அம்மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தலைக்கு  முறையே ரூ.  10 மற்றும் 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 15 ஆம் தேதி  லுதியானாவில்  போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கிலும் இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்த நிலையில்,  போதைப்பொருள் கடத்தல் காரர்கள் இருவரும் மேற்கு வங்காளத்திற்கு தப்பி ஓடியுள்ளனர். கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருவரும் பதுங்கியிருப்பதாக மேற்கு வங்காள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  பஞ்சாப் மாநில போலீசாரின் சிறப்பு குழு விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு விரைந்தது. 

மேற்கு வங்காள போலீசாருடன் இணைந்து  பஞ்சாப் போலீசாரும் இணைந்து குறிப்பிட்ட இடத்திற்கு  சென்றனர். கடத்தல்காரர்கள் தங்கியிருந்த சுற்றி வளைத்த போலீசார் அவர்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த  இருவரும் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்த பதில் தாக்குதல் நடத்தினர். 

இதில் கடத்தல்காரர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரில் போலீசார் ஒருவரும் காயம் அடைந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட கடத்தல்காரர்களிடம் துப்பாக்கிகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

Next Story