மாநிலங்களிடம் பொறுப்பை விடாமல் “தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசே தடுப்பூசியை வினியோகிப்பது ஏன்?” மம்தா பானர்ஜி கேள்வி


மாநிலங்களிடம் பொறுப்பை விடாமல் “தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசே தடுப்பூசியை வினியோகிப்பது ஏன்?” மம்தா பானர்ஜி கேள்வி
x
தினத்தந்தி 10 Jun 2021 4:48 AM GMT (Updated: 10 Jun 2021 4:48 AM GMT)

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசியை மாநிலங்களுக்கு பதிலாக மத்திய அரசு வினியோகிப்பது ஏன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

கொல்கத்தா,

இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு வழங்க இருப்பதாகவும், மீதி 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் ஆஸ்பத்திரிகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்காக போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று சந்தித்தார்.

அதன் பின்னர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விவசாயிகள் பிரச்சினை வரை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நாட்டை கடும் நெருக்கடியில் தள்ளி உள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை நேரடியாக மத்திய அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் மத்திய அரசு இதைச்செய்ய வேண்டும்? கூட்டாட்சி முறையில் மத்திய அரசின் கொள்கையைத்தானே மாநில அரசுகள் அமல்படுத்துகின்றன?

மாநில அரசுகளுக்கு எதிராக எப்படி பேசுவது என்பது மட்டும்தான் பிரதமருக்கு தெரியும். பிரித்தாள்வது மட்டும்தான் அவருக்கு தெரியும். கொரோனா மருந்துகள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. திரும்பப்பெறப்படுவது பற்றி ஒரு வார்த்தைகூட பிரதமரிடம் இருந்து வரவில்லை?

இந்த நாட்களில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு பி.எம்.கொரோனா நிதி ரூ.34 ஆயிரம் கோடியை செலவு செய்ய பிரதமர் நினைக்கவில்லை.

இந்த கால கட்டத்தில் இலவச தடுப்பூசி திட்டத்துக்கு ஏற்கனவே முடிவு எடுத்திருந்தால், 18-45 வயது பிரிவினரில் எத்தனையோ உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி என்ன ஆயிற்று?

மேற்கு வங்காளத்தில் 2 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி கொள்முதலுக்கு மாநில அரசு ரூ.200 கோடி செலவு செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story