உத்தரபிரதேசத்தில் இரட்டை மாடி பஸ்- வேன் மோதல்; 19 பேர் பரிதாப பலி மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி


உத்தரபிரதேசத்தில் இரட்டை மாடி பஸ்- வேன் மோதல்; 19 பேர் பரிதாப பலி மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 10 Jun 2021 4:53 AM GMT (Updated: 10 Jun 2021 4:53 AM GMT)

உத்தரபிரதேசத்தில் இரட்டை மாடி பஸ்சும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து, பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கான்பூர், 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு இரட்டை மாடி பஸ் புறப்பட்டது. அந்த பஸ், கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பிஸ்கட் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு வேனுடன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றியும் 9 பேர் பலியானார்கள்.

பஸ் பயணிகள் 70 பேர் லேசான காயமடைந்தனர். படுகாயமடைந்த 10 பேர் கான்பூரில் உள்ள லாலா லஜபதிராய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பஸ் டிரைவர் மது அருந்தியதாக பஸ் பயணிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக கூறியுள்ளார்.

மேலும், பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதுபோல், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story