வேளாண் சட்டங்களில் ஆட்சேபனை ஷரத்துகளை தெரிவிக்க வேண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் மத்திய வேளாண் மந்திரி அறிவிப்பு


வேளாண் சட்டங்களில் ஆட்சேபனை ஷரத்துகளை தெரிவிக்க வேண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் மத்திய வேளாண் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 4:57 AM GMT (Updated: 10 Jun 2021 4:57 AM GMT)

விவசாயிகள் விரும்பும்போது பேச்சுவார்த்தை நடத்த தயார், வேளாண் சட்டங்களில் ஆட்சேபனைக்குரிய ஷரத்துகளை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் மந்திரி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

கடந்த ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரபிரதேசம் ஆகியவற்றை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த பிறகு பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

வேளாண் சட்டங்கள் அமலாக்கத்தை மறுஉத்தரவு வரும்வரை நிறுத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அச்சட்டங்களை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்தநிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வேளாண் சீர்திருத்தங்களை கொண்டுவர எல்லா அரசியல் கட்சிகளும் விரும்பின. ஆனால், அவற்றை கொண்டுவர அக்கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை. மோடி அரசுதான் விவசாயிகள் நலனுக்காக இந்த மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்தது.

இதன்மூலம் நாட்டின் பல பாகங்களில் விவசாயிகள் பலன் பெறத்தொடங்கினர். அதற்குள் விவசாயிகள் போராட்டம் தொடங்கிவிட்டது.

விவசாய சங்கங்களுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். வேளாண் சட்டங்களில் எந்த ஷரத்துகள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதை தர்க்கரீதியாக சொல்லுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், நாடாளுமன்றத்தில் எந்த கட்சி தலைவரும் இதற்கு பதில் அளிக்கவில்லை. விவசாய சங்க தலைவர்களும் பதில் சொல்லவில்லை.

விவசாயிகள் விரும்பும்போது பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. ஆட்சேபனைக்குரிய ஷரத்துகளை அவர்கள் சொல்ல வேண்டும் என்று மீண்டும் கேட்கிறோம். அதன்மூலம் அவற்றை பரிசீலித்து தீர்வை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story