கேரளாவில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 35 கோடி ரூபாய் அபராதம் வசூல்


கேரளாவில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 35 கோடி ரூபாய் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 10 Jun 2021 8:29 AM GMT (Updated: 10 Jun 2021 8:29 AM GMT)

கேரளாவில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 35 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளின் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 35 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் 35 கோடியே 17 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றியவர்கள், கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்கள் உள்ளிட்டோர் மீது இதுவரை 82,630 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே கட்டுப்பாடுகளை மீறும் திருமண மண்டபங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், தேவையின்றி செல்லும் வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story