பா.ஜ.க.விடமிருந்து ஜிதின் பிரசாதாவுக்கு பிரசாதம் கிடைக்குமா? கபில் சிபல் கிண்டல்


பா.ஜ.க.விடமிருந்து ஜிதின் பிரசாதாவுக்கு பிரசாதம் கிடைக்குமா? கபில் சிபல் கிண்டல்
x
தினத்தந்தி 10 Jun 2021 6:13 PM GMT (Updated: 10 Jun 2021 6:13 PM GMT)

பா.ஜ.க.வுக்கு தாவிய ஜிதின் பிரசாதாவுக்கு அந்த கட்சியில் இருந்து பிரசாதம் கிடைக்குமா என்று கபில் சிபல் கிண்டல் செய்துள்ளார்.

கபில் சிபல் கிண்டல்
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சியின் இளம்தலைவராக திகழ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா, அக்கட்சியில் இருந்து விலகி நேற்று 
முன்தினம் பா.ஜ.க.வுக்கு தாவி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “ஜிதின்பிரசாதா பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு பா.ஜ.க.வில் இருந்து பிரசாதம் கிடைக்குமா அல்லது அவர் உ.பி. தேர்தலுக்காக பிடிக்கப்பட்டுள்ள ஒரு ‘கேட்ச்’தானா” என கிண்டல் செய்துள்ளார். மேலும், “இது போன்ற பேரங்களில் சித்தாந்தம் ஒரு பொருட்டே இல்லை என்றாகி விட்டால் தாவல்கள் எளிதாகிவிடும்” என்றும் சாடி உள்ளார்.

சசி தரூர்
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூரும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.அதில் அவர், “அரசியல் என்பது கொள்கையற்ற வாழ்வாக இருக்க முடியுமா? அரசியல் என்பது கருத்துகளைப் பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது அது ஒன்றுமில்லை. ஒரு கிரிக்கெட் வீரர் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டிருப்பதுபோல நமபிக்கை உள்ள ஒருவர் அரசியல் கட்சிகளை மாற்ற முடியுமா?” என கேட்டுள்ளார்.

ஜிதின் பிரசாதா விளக்கம்
இதற்கிடையே ஜிதின் பிரசாதா தன்னிலை விளக்கம் அளிக்கிற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “எந்த ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ, பதவிக்காகவோ நான் காங்கிரசில் இருந்து விலகவில்லை. அந்தக் கட்சிக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருவதால்தான் நான் காங்கிரசை விட்டு விலகினேன். இதனால்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் ஓட்டு வங்கி குறைந்தது. கட்சிக்கு புத்துயிரூட்ட திட்டம் எதுவும் இல்லை” என கூறினார்.மேலும், “பா.ஜ.க.வில் சேருவதற்கான முடிவை விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பின்னர்தான் எடுத்தேன். மக்களுக்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய விரும்புகிறேன்”எனவும் குறிப்பிட்டார்.

Next Story