பிரதமர் மோடி நாட்டிற்கும், பா.ஜனதாவுக்கும் சிறந்த தலைவர்: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேட்டி


பிரதமர் மோடி நாட்டிற்கும், பா.ஜனதாவுக்கும் சிறந்த தலைவர்: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2021 9:44 PM GMT (Updated: 10 Jun 2021 9:44 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கும், பா.ஜனதாவுக்கும் சிறந்த தலைவர் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

புலியுடன் மீண்டும் நட்பு
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது உத்தவ் தாக்கரேயை பிரதமர் ேமாடி தனிப்பட்ட முறையிலும் சந்தித்து பேசினார். இது மராட்டிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதேபோல பா.ஜனதா மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பிரதமர் மோடி விரும்பினால் தங்கள் கட்சி புலியுடன் (சிவசேனாவின் அடையாளம்) மீண்டும் நட்பை ஏற்படுத்தும் என்றார்.

இந்தநிலையில் வடக்கு மராட்டிய பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பிரதமர் மோடியின் புகழ் குறைந்துவிட்டதால், மாநில தேர்தல்களில் மாநில தலைவர்களை முன்னிலைப்படுத்தி எதிர்கொள்ள ஆர்.எஸ்.எஸ். சிந்தித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

சிறந்த தலைவர்
இதில் பதில் அளித்த அவர், “இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஊடகங்களின் யூகங்களுக்கு நான் பதில் கூற முடியாது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளில் பா.ஜனதா அதன் வெற்றிக்கு நரேந்திர மோடிக்கு கடமைப்பட்டு இருக்கிறது. தற்போது அவர் நாட்டிற்கும், பா.ஜனதாவுக்கும் சிறந்த தலைவராக விளங்குகிறார். சிவசேனா நிலைப்பாடு எப்போதுமே ஒன்றுதான். பிரதமர் முழு நாட்டிற்கும் சொந்தமானவர். அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானவர் இல்லை. எனவே அவர் மாநில தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்ள கூடாது” என்றார். இதேபோல் சந்திரகாந்த் பாட்டீல் புலிகளுடன் நட்பு கொள்வது குறித்த கேள்விக்கு அவர், ‘புலியுடன் யாரும் நட்பு கொள்ள முடியாது. புலி தான் யாருடனும் நட்பு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது’ என்றார்.

Next Story