புதுச்சேரியில் வரும் 14-ந்தேதி திட்டமிட்டபடி அமைச்சர்கள் பதவி ஏற்பதில் சிக்கல்; என்.ஆர்.காங்கிரஸ் மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தி


புதுச்சேரியில் வரும் 14-ந்தேதி திட்டமிட்டபடி அமைச்சர்கள் பதவி ஏற்பதில் சிக்கல்; என்.ஆர்.காங்கிரஸ் மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தி
x
தினத்தந்தி 10 Jun 2021 10:11 PM GMT (Updated: 10 Jun 2021 10:11 PM GMT)

இலாகாக்கள் ஒதுக்கும் இழுபறியால் என்.ஆர்.காங்கிரஸ் மீது பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ள நிலையில் புதுவையில் வரும் 14-ந்தேதி திட்டமிட்டபடி அமைச்சர்கள் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.

கூட்டணி ஆட்சி
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் (மே) 7-ம் தேதி ரங்கசாமி பதவி ஏற்றார். அதன் பின்பு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு 
மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் நடைபெறவில்லை. ரங்கசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

துணை முதல்-அமைச்சர் பதவி
இதுதொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும்போது, துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவிகள் தங்களுக்கு தரப்படும் என்று ரங்கசாமி உறுதி அளித்ததாக தெரிவித்தனர். ஆனால் பதவியேற்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் 
ரங்கசாமி ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அமைச்சர் பதவிகளை தரவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு கட்சிகளும் தங்களது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தன.

பா.ஜ.க. மேலிட பார்வையாளர் சந்திப்பு
இதற்கிடையில் கூட்டணி என்பதால் சிலவற்றை விட்டுக் கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும் தெரிவித்தார். அதாவது 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தர ரங்கசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமாரும் சபாநாயகராக ஏம்பலம் செல்வமும் நியமிக்கப்படுவது தொடர்பாக ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. கடந்த வாரம் 3 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரங்கசாமி மீது அதிருப்தி
அப்போது அவர் பா.ஜ.க. அமைச்சர்களுக்கு வழங்கப்படும் இலாகாக்கள் தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் அதை ரங்கசாமி கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பா.ஜ.க. தலைமையிடம் பேசிக்கொள்வதாக அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. மேலிட தூதுவராக வந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி.யிடம் உரிய முறையில் பதில் அளிக்காதது குறித்து அவர் பா.ஜ.க. கட்சித்தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்ட கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. தங்களது தூதரை உரிய முறையில் நடத்தாத ரங்கசாமி மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமைச்சரவை பட்டியல் இறுதி  செய்து வைத்துள்ள பா.ஜ.க. மேலிடம் இன்னும் ரங்கசாமியிடம் அதனை வழங்கவில்லை.

14-ந் தேதி பதவி ஏற்பு நடைபெறுமா?
ரங்கசாமியே பா.ஜ.க. மேலிடத்தை தொடர்பு கொண்டு பேசும் வரை காத்திருப்பது என்று அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 14-ந் தேதி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தெலுங்கானா சென்றுள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்னும் புதுச்சேரி திரும்பாததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story