‘தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்குள் குறைக்க வேண்டும்’; மத்திய அரசு வலியுறுத்தல்


‘தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்குள் குறைக்க வேண்டும்’; மத்திய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2021 6:22 PM GMT (Updated: 11 Jun 2021 6:22 PM GMT)

தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்குள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

ஒரு சதவீதத்துக்குள்...
நாடு கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகிற வேளையில், அதற்கான தடுப்பூசிகளை பல மாநிலங்கள் வீணாக்குவதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்கிற வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பல மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணாகிற அளவுக்கு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. வீணடிப்பது மட்டுமின்றி, குப்பியில் இருந்து அதிகளவிலான மருந்தையும் எடுத்து விடுகின்றனர். இதுவும் ஒரு விதத்தில் தடுப்பூசியை வீணடிப்பதுதான்.

* தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்குள்ளோ அல்லது அதற்கு கீழோ வைக்க வேண்டும். இது செயல்படுத்தக்கூடியதுதான்.

தடுப்பூசிக்கு முக்கிய பங்கு

* மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்தும், தொற்றினால் ஏற்படுகிற உயிரிழப்பு மற்றும் இணை நோய்களில் இருந்தும் காப்பாற்றுவதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

* தடுப்பூசியை உருவாக்க நீண்ட காலம் ஆகும். வினியோகத்தை விட தேவை அதிக அளவில் இருக்கிறது. எனவே இந்த விலைமதிப்பற்ற தடுப்பூசி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். இதைக் கண்காணிப்பது முக்கியம். தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும். இதன்மூலம் இன்னும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசியை போட முடியும்.

* ஒவ்வொரு டோஸ் தடுப்பூசியும் சேமிக்கப்படும்போது, மேலும் ஒருவருக்கு தடுப்பூசி போட ஏதுவாகும்.

சுகாதார பணியாளர்களுக்கு...

* தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்கள், ஒரு குப்பியை திறக்கிற நாள், நேரத்தை குறித்து வைக்கவும், திறக்கப்பட்ட குப்பிகள் 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் சுகாதார பணியாளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

* ஒவ்வொரு தடுப்பூசி அமர்விலும் 100 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அதே நேரத்தில் கடைக்கோடியிலும் அல்லது குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களிலும் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Next Story