கோவேக்சினுக்கு அமெரிக்கா அங்கீகாரம் தர மறுப்பு; இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு


கோவேக்சினுக்கு அமெரிக்கா அங்கீகாரம் தர மறுப்பு; இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 6:47 PM GMT (Updated: 11 Jun 2021 6:47 PM GMT)

கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை அமெரிக்கா தர மறுத்ததால், இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் விண்ணப்பம்
இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதன் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தடுப்பூசி அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கோரி பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க கூட்டாளி நிறுவனம் ஒகுஜென் விண்ணப்பித்தது.

அங்கீகாரம் மறுப்பு
ஆனால் இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளிக்கவில்லை. மாறாக அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு பதிலாக பி.எல்.ஏ. என்னும் நிரந்தர அங்கீகாரத்துக்கு கூடுதல் விவரங்களுடன் வருமாறு கூறி விட்டது. இதனால் இந்த தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை தாமதப்படுத்தும்.

நிறுவனங்கள் கருத்து
இதுபற்றி ஒகுஜென் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “ இனி நாங்கள் கோவேக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை கோர மாட்டோம்” என கூறி விட்டது. பாரத் பயோடெக் நிறுவனம், “ கொரோனா தடுப்பூசிகள் எதற்கும் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்து விட்டது. எல்லா விண்ணப்பங்களும் பி.எல்.ஏ. என்று அழைக்கப்படுகிற நிரந்தர உரிம அங்கீகாரத்துக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் தடுப்பூசிக்கான நிலையான செயல்முறை. கூடுதலான மருத்துவ பரிசோதனை தரவுகள் தேவைப்படுகிறது”என கூறியது.

மத்திய அரசு கருத்து

இது குறித்து மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென சொந்த ஒழுங்குமுறை அமைப்பு உள்ளது. அங்கீகாரம் அளிப்பதில் சில அம்சங்கள் பொதுவாக இருக்கலாம். நம் நாட்டின் ஒழுங்குமுறையும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறது. அறிவியல் கட்டமைப்பு ஒன்றாக இருந்தாலும், நுணுக்கம் மாறுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிவியல் கட்டமைப்பு வலுவாக உள்ளது. நம்மிடம் உற்பத்தி வலுவாக இருக்கிறது. நாம் நன்றாக செயல்படுகிறோம். நாம் அவர்களது முடிவை மதிக்கிறோம். அதே நேரத்தில் இந்த முடிவு, நமது தடுப்பூசி திட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story