இத்தாலி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு; சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைப்பு


இத்தாலி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு; சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 8:15 PM GMT (Updated: 11 Jun 2021 8:15 PM GMT)

இத்தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு வழங்கிய ரூ.10 கோடி இழப்பீட்டுத் தொைக சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

மீனவர்கள் சுட்டுக் கொலை
கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோரை, அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலின் இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு சிறை விடுப்பில் சொந்த நாடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சர்வதேச கோர்ட்டு தீர்ப்பு
ஆனால் அவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று இத்தாலி அரசு தெரிவித்துவிட்டது. இந்திய சட்டங்களின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கோரி சர்வதேச கோர்ட்டையும் நாடியது. அவர்கள் மீது இந்தியா சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்குப்பெற முடியும் என்று சர்வதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்திய தரப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது என நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பெர்மனன்ட் கோர்ட் ஆப் ஆர்ப்பிட்ரேசன் தெரிவித்தது.

ரூ.10 கோடி இழப்பீடு
இத்தாலிய கடற்படையினர் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது என்று சர்வதேச கோர்ட்டு தெரிவித்திருந்தாலும் அவர்கள் இத்தாலிய சட்டங்களின்படி இந்த கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் 
தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மாசிமிலியானே லாத்தோரே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இத்தாலிய கடற்படையினரால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இத்தாலி அரசு வழங்கிய ரூ.10 கோடி இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செலுத்த மத்திய அரசுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது.

காயமடைந்தவர்களுக்கும்...
இந்தநிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இத்தாலி வழங்கிய ரூ.10 கோடி, சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் பலியானவர்களுக்கு மட்டுமல்லாமல் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்துவதால், இந்த இழப்பீட்டுத் தொகையை பங்கிட்டு கொடுக்க வேண்டிள்ளது என வாதிட்டார்.

15-ந் தேதி உத்தரவு
கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.என்.பாலகோபால், பாதிக்கப்பட்ட வாரிசுகளின் ஒப்புதலைப் பெற்று, இழப்பீட்டு தொகையை பங்கிட்டு அளிப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து இத்தாலி அரசு சார்பில் மூத்த வக்கீல் சோஹில் தத்தா ஆஜராகி, சர்வதேச சமரச ஆணையத்தின் தீர்ப்பின்படி, இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கும், இத்தாலி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.10 கோடியை பங்கிட்டு அளிப்பது தொடர்பான உத்தரவு ஜூன் 15-ந் தேதி பிறப்பிக்கப்படும் என தெரிவித்ததுடன், சர்வதேச சமரச ஆணையத்தின் தீர்ப்பின்படி, இத்தாலிய வீரர்களுக்கு எதிரான வழக்கை இத்தாலி விசாரிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

Next Story