கொரோனா பெருந்தொற்று தொடர்பாக நிபுணர்கள் ஆலோசனைகள்; மத்திய அரசு நாடுகிறது


கொரோனா பெருந்தொற்று தொடர்பாக நிபுணர்கள் ஆலோசனைகள்; மத்திய அரசு நாடுகிறது
x
தினத்தந்தி 11 Jun 2021 8:45 PM GMT (Updated: 11 Jun 2021 8:45 PM GMT)

சமீபத்தில் பிரதமர் மோடியிடம் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், கொரோனா தொடர்பான தேசிய பணிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொது சுகாதார நிபுணர்கள் அறிக்கை ஒன்றை அளித்தனர்.

அதில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பாக தொற்றுநோய் நிபுணர்கள், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களுடன் நாங்கள் விவாதம் நடத்துவோம். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசியை தவிர்க்கலாம் என்பது போன்ற முடிவுகளை இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேசிய தொழில் நுட்பக்குழு எடுக்க வேண்டும். கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் நோயில் இருந்து மீண்டு வந்து 3 மாதங்கள் ஆன நிலையில் தடுப்பூசி செலுத்தினால் போதும் என்ற முடிவை அந்தக்குழு, அறிவியல் மற்றும் தரவுகள் அடிப்படையிலேயே எடுத்தது. மேலும் தரவுகள், புதிய ஆலோசனைகள் வந்தால் அவர்கள் பரிசீலித்து விவாதித்து முடிவு எடுப்பார்கள். உலக சுகாதார நிறுவனத்திலும், மற்ற நாடுகளிலும்கூட நேரத்துக்கு நேரம் பல முடிவுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அறிவியல் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அத்தகைய யோசனைகள் மீது விவாதங்களும் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story