மும்பைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’; முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்


மும்பைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’; முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:23 PM GMT (Updated: 11 Jun 2021 10:23 PM GMT)

மும்பை, தானே, ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இங்கு நாளை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.

மழையால் விபத்து
மும்பையில் கடந்த புதன்கிழமை பருவ மழை காலம் தொடங்கியது. பருவகாலம் தொடங்கிய முதல் நாளே நகரில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடானது. சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் வாகன, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல மால்வாணியில் 3 மாடி கட்டிடம் இடிந்து 8 சிறுவர், சிறுமிகள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று முன்தினம் தகிசரில் நடந்த கட்டிட விபத்தில் 26 வயது பெண் பலியானார்.இந்தநிலையில் நேற்று காலை நகரில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப தொடங்கியது. குறிப்பாக சாலை, ரெயில் போக்குவரத்து சீராக நடந்து வந்தது.

மீண்டும் மழை
இந்தநிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. இரவு பெரும்பாலான இடங்களில் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தகிசர் பகுதியில் அதிகபட்சமாக 11.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.மேலும் போாிவிலியில் 10 செ.மீ., காந்திவிலியில் 7.9 செ.மீ., பாந்திரா 7.9 செ.மீ., மலாடு 5.9 செ.மீ., கோரேகாவ் 5.4 செ.மீ. மகாலெட்சுமி 4.4 செ.மீ., சாந்தாகுருஸ் 3.6 செ.மீ., ஜூகு 2.9  செ.மீ. மழை பதிவாகி இருந்தது. மும்பை போல தானே, நவிமும்பை மற்றும் பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’
இந்தநிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மும்பை உள்ளிட்ட கொங்கன் மண்டல பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதற்காக மும்பைக்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’  விடுக்கப்பட்டுள்ளது. அன்று மிக மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அடுத்து மும்பை மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதில் மண்டல கட்டுப்பாட்டு அறைகள், அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் தேவையான மனித வளத்துடன் அனைத்து உபகரணங்கள், சாதனங்களுடன் மிகுந்த எச்சாிக்கையுடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக கூடாரங்கள்
இதேபோல மும்பைக்கு மின்வினியோகம் செய்யும் பெஸ்ட், அதானி போன்ற நிறுவனங்களும் விழிப்புடன் இருக்க மாநகராட்சி எச்சரித்து உள்ளது. மேலும் மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை தங்க வைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மராட்டியத்தில் 21 மாவட்டங்களில் ஜூன் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை வழக்கமாக பெய்யும் மழையைவிட 60 சதவீதம் அதிகம் மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களிலும் வழக்கத்தைவிட அதிக மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story