ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு - பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் கூறிய காங்கிரஸ் தலைவர்


ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு - பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் கூறிய காங்கிரஸ் தலைவர்
x
தினத்தந்தி 12 Jun 2021 12:11 PM GMT (Updated: 12 Jun 2021 12:11 PM GMT)

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி, 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. தற்போது, காஷ்மீரில் நிலையை சீரடைந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங் பேசிய ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் 'கிளப் ஹவுஸ்’ வலைதளம் மூலம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங் பேசிய ஆடியோவை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 

அந்த ஆடியோவில் பாகிஸ்தானிய செய்தியாளர்டம் பேசிய திக் விஜய சிங், அவர்கள் (மத்திய பாஜக அரசு) காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ நீக்கியதில் இருந்து காஷ்மீரில் ஜனநாயகம் இல்லை. 

அனைவரையும் அவர்கள் (மத்திய அரசு) சிறைச்சாலையில் அடைத்ததால் அங்கு மனிதாபிமானம் இல்லை. மதச்சார்பின்மையின் அடிப்படையே காஷ்மீரியர்கள் தான். ஏனென்றால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள அங்கு இந்து மன்னர் ஆட்சி செய்தார். இரு தரபினரும் இணைந்து செயல்பட்டனர். அரசுப்பணிகளில் கூட காஷ்மீரி பண்டிதர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது மிகவும் சோககரமான முடிவு. காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் இந்த முடிவு  (காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது) குறித்து மறு ஆய்வு செய்யப்படும்’ என்று பேசினார்.

இந்த ஆடியோவை பாஜக கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகி வருகிறது. 

ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முடிவு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங் கூறியதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

Next Story