மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் நிதிஷ்குமார் கட்சி கோரிக்கை


மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் நிதிஷ்குமார் கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 3:46 AM GMT (Updated: 13 Jun 2021 3:46 AM GMT)

மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதைக்குரிய பங்கு தரவேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி திடீர் கோரிக்கை விடுத்துள்ளது.

பாட்னா, 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்டன.

மூத்த மத்திய மந்திரிகளான பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், கிரண் ராஜூ உள்ளிட்டோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகிறார்கள்.

மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோர் மரணம் அடைந்து விட்டனர்.

சிவசேனா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரிசபையில் இருந்து விலகி உள்ளன.

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ராம்தாஸ் அத்வாலே (இந்திய குடியரசு கட்சி) மட்டுமே மந்திரி பதவி வகிக்கிறார்.

எனவே காலி இடங்களை நிரப்பவும், அடுத்த ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கிற வகையிலும் மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பீகாரில் பா.ஜ.க.வுடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து வருகிற நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஆர்.சி.பி.சிங், பாட்னாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோம். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் மரியாதைக்குரிய பங்கு அளிக்க வேண்டும்.

மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பின்போது, மரியாதைக்குரிய பங்கு வேண்டும் என்று கேட்பீர்களா என கேட்கிறீர்கள். இதில் கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. இது புரிந்து கொள்ளும் விவகாரம்தான். இது இயல்பான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு மக்களவையில் 18 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளில் அதிக இடங்களை தற்போது இந்த கட்சிதான் பெற்றிருக்கிறது.

Next Story