மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து மாயமான கார்; சமூகவலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு


மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து மாயமான கார்; சமூகவலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 9:14 PM GMT (Updated: 13 Jun 2021 9:14 PM GMT)

மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து கார் மாயமாவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளத்தில் மாயமான கார்
மும்பை காட்கோபர் பகுதியில் ராம்நிவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் வாகன நிறுத்தப்பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் நேற்று காலை 9 மணியளவில் திடீரென பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தில் விழுந்த கார், அதில் நிரம்பி இருந்த தண்ணீரில் மூழ்கி மாயமானது. நிலத்தில் நின்ற கார் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையே கட்டிடம் அமைந்து உள்ள காமா லேன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் தான் பள்ளம் உருவாகி கார் மாயமாகிவிட்டதாக நினைத்து அந்த பகுதிக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சென்ற பிறகு தான் குடியிருப்பு கட்டிடத்தில் உருவான பள்ளத்தில் கார் மூழ்கியது தெரியவந்தது.

காரின் சுமை தாங்காமல்...
இது குறித்து போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘கட்டிட குடியிருப்பு பகுதியில் உள்ள கிணறின் ஒரு பகுதி கான்கிரீட்டால் மூடப்பட்டு உள்ளது. அதன் மீது கார் நிறுத்தப்பட்டு உள்ளது. மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால், காரின் சுமை தாங்காமல் கான்கிரீட் தளம் உடைந்து அதில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் மூழ்கியிருக்கிறது.அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லை. அந்த கார் பங்கஜ் மேத்தா என்பவருக்கு சொந்தமானதாகும். குடியிருப்பு சங்கம் தான் கிரேன் மூலம் காரை மீட்டு வெளியே கொண்டு வரவேண்டும்’’ என்றார்.

Next Story