மாநிலங்களிடம் 1 கோடியே 40 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


மாநிலங்களிடம் 1 கோடியே 40 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 14 Jun 2021 5:23 PM GMT (Updated: 14 Jun 2021 5:23 PM GMT)

மாநிலங்களிடம் 1 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 224 டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி அனுமதி வழங்கப்பட்டது.
 
இதையடுத்து ஜனவரி 16-ந் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 26 கோடியே 68 லட்சத்து 36 ஆயிரத்து 620 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. அவற்றில் இதுவரை 25 கோடியே 27 லட்சத்து 66 ஆயிரத்து 396 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

மீதி 1 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 224 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன. இன்னும் 2 நாட்களில் 96 ஆயிரத்து 490 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story